வாழைத்தோட்டங்களை நாசப்படுத்தும் யானைக் கூட்டம்🐘 🐘 ! நாடகமாடும் வனத்துறை அதிகாரிகள் ! கொந்தளிக்கும் ஆடலூர் விவசாயிகள் !!!

               
  
  திண்டுக்கல் மாவட்டம் ஆடலூர் பகுதியில் வாழைத்தோட்டங்களை யானைகள் நாசம் செய்துள்ளன. யானைகளை விரட்டிவிட்டதாக வனத்துறை அதிகாரிகள் நாடகமாடுவதாக விவசாயிகள் கொந்தளிக்கின்றனர்.
திண்டுக்கல் மாவட்டம் ரெட்டியார் சத்திரம் ஒன்றியத்திற்கு உட்பட்டது ஆடலூர் கிராமம். கொடைக்கானல் மலையின் கிழக்குப் பகுதியில் உள்ளது. இங்கு வாழை, எலுமிச்சை, மிளகு, ஏலம், காபி, கமலா ஆரஞ்சு, சௌசௌ, பலா உள்ளிட்ட விளைப் பொருட்கள் பயிரிடப்படுகின்றன. காபி, பலா, கமலா ஆரஞ்சு ஆகியவை வருடத்திற்கு ஒரு முறை தான் பலன் கொடுக்கும். இந்த மலைப்பகுதியில் உள்ள சிறு-குறு விவசாயிகள் பெரும்பாலும் வாழை விவசாயத்தை மேற்கொண்டுவருகின்றனர்.


         இந்நிலையில், இப்பகுதியில் மத்திய அரசு வன உயிரினப் பூங்கா அமைக்க முயற்சிகள் மேற்கொண்டுவருகிறது. இதற்காக மலை மக்களை விரட்டுவதற்காக யானை, மலைப்பாம்பு,புலி, சிறுத்தை, காட்டுமாடு,செந்நாய் உள்ளிட்ட வன விலங்குகளை இந்தப் பகுதியில் வனத்துறை அதிகாரிகள் இறக்கி விட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. தற்போது யானைகள் நடமாட்டமும் அதிகரித்துள்ளது.
 

                       யானைகள் வாழைத்தோட்டங்களுக்குள் புகுந்து பெரும் சேதத்தை உருவாக்கி வருகின்றன. இதனால் விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்களின் வாழ்வாதாரம் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.

          யானைகளின் தொல்லை குறித்து வாழை விவசாயி மாரிமுத்து, விவசாயிகள் சங்கத் தலைவர் நமச்சிவாயம் ஆகியோர் மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட வனத்துறை அதிகாரியிடமும் புகார் கொடுத்துள்ளனர். ஆனால், வனத்துறையினர் யானைகளை விரட்டிவிட்டதாகக் கடந்த 19-ஆம் தேதி தெரிவித்துள்ளனர். ஆனால், இரண்டு நாட்களுக்கு முன்புகூட யானைக் கூட்டம் மாரிமுத்து என்பவரின் தோட்டத்தை நாசம் செய்துள்ளன.
                     இது குறித்து விவசாயி மாரிமுத்து கூறியதாவது, சுமார் 15 யானைகள் ஆடலூர், கே.சி.பட்டி, சோலைக்காடு, குப்பம்மாள்பட்டி, கவியக்காடு பகுதிகளில் கடந்த ஒரு மாதமாக யானைகள் முகாமிட்டுள்ளன. எனது தோட்டத்தையொட்டி ஐந்து யானைகள் முகாமிட்டு உள்ளன. வங்கியில் %.10 லட்சம் கடன் வாங்கி வாழை பயிர் செய்தேன். வாங்கிய கடனையாவது அடைத்துவிடலாம் என்ற நம்பிக்கையில் இருந்தேன். ஆனால், யானைகள் புகுந்து நாசம் செய்துவிட்டன. கடனை நான் எப்படி திரும்பச் செலுத்துவேன். யானைகள் வாழைகளை சேதப்படுத்தியது பெரும் வேதனையை ஏற்படுத்தியுள்ளது.

                  செந்தில்குமார் என்ற விவசாயி கூறியதாவது, ஆடலூர் பகுதியில் பெரும்பாறை, காமனூர், பட்லங்காடு பகுதிகளில் சுமார் 18 ஆயிரம் ஏக்கர் விளை நிலங்கள் உள்ளன. வாழை விவசாயம் தான் இங்கு பிரதானம்.
ஆடலூரைச் சுற்றி மூன்று கி.மீ தூரத்திற்கு வன நிலமே இல்லை. தற்போது வனத்துறையினர் இந்தப் பகுதியில் யானையைக் கொண்டு வந்து விட்டார்களா? அல்லது யானைகள் தாங்களாகவே வந்ததா என்று தெரியவில்லை. யானைகளால் எங்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகியுள்ளது. யானைகளை விரட்ட அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றார்.



அச்சத்தில் பூமலை ஆதிவாசிகள்

                ஆதிவாசி சமூகத்தைச் சேர்ந்த புலையர் இன மக்கள் வசிக்கும் பூமலை உள்ளது. ஏராளமான குடும்பங்கள் இங்கு வசித்துவருகின்றன. இரவு நேரங்களில் யானைகளுடன் போராடுவதே இவர்களது பிரதானப் பணியாக உள்ளது. குறிப்பாக நெருப்பு மூட்டியும் தாரைத் தப்பட்டையை அடித்தும் யானைகளை விரட்டி வருகின்றனர்.

              இது பற்றி மகுடீஸ்வரன் கூறியதாவது, பூமலை கிராமத்தில் யானைகள் தொல்லை உள்ளது. குடிதண்ணீர் கிணற்றை உடைத்து விட்டன. 3.கி.மீ தூரத்தில் உள்ள ஆடலூர் பள்ளிக்குச் செல்ல பயமாக உள்ளது. இதனால் மாணவர்களின் கல்வி பாதிக்கப்பட்டுள்ளது. அரசு உடனடியாக நடவடிக்கை எடுத்து யானைகளை அப்புறப்படுத்த வேண்டும் என்றார்.

                   முத்துக்கண்ணு என்றபெண் கூறியதாவது, யானைகள் எங்களது வீடுகளைச் சுற்றிச் சுற்றி வருகின்றன. குழந்தைகளுடன் வீட்டில் இருப்பதற்குப் பயமாக உள்ளது. சில நேரங்களில் யானைகள் ஊருக்குள் வந்துவிடுகின்றன. இதனால் நாங்கள் அனைவரும் ஒரே இடத்தில் கூட்டமாகத் தங்கிவிடுகிறோம். குடிநீர் குழாய்களை யானைகள் உடைத்துவிடுவதால் தண்ணீருக்காக ஒவ்வொரு தோட்டம் தோட்டமாகச் சென்றுவருகிறோம் என்றார்.
                   சுரேஷ்குமார் என்பவர் கூறியதாவது, யானைகள் பெரும்பாலும் மாலை 5 மணி முதல் ஏழு மணிக்குள் வந்து செல்கின்றன. அவைகளைக் கட்டுப்படுத்த புகையைப் போடுங்கள் எனக்கூறிவிட்டு வனத்துறையினர் சென்றுவிடுகின்றனர். அவர்கள் எங்களைப் பாதுகாப்பதில்லை. தினம்தோறும் அச்சத்துடனேயே வாழ்ந்து வருகிறோம்.
                        செல்வராஜ் என்ற விவசாயத் தொழிலாளி கூறியதாவது, பெரும்பாலான வாழைத் தோட்டங்களை யானைகள் சேதப்படுத்திவிட்டன. இதனால் எங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. வனத்துறை அதிகாரிகள் கண்டுகொள்ள மறுக்கின்றனர் என்றார்.
                   விவசாயிகள் சங்கத் தலைவர் நமச்சிவாயம் கூறியதாவது, யானைகளின் தொல்லையைக் கட்டுப்படுத்த வலியுறுத்தி வனத்துறை அதிகாரிகளிடம் மனுக் கொடுத்தோம். ஆனால் நடவடிக்கை எடுக்கவில்லை. எங்களைக் கிராமத்திலிருந்து வெளியேற்றுவதற்காக யானைகள், மலைப்பாம்புகள், சிறுத்தைகளை இறக்கியிருக்கலாம் எனச் சந்தேகிக்கிறோம். மலை மக்களின் உரிமைகளைப் பாதுகாக்க வலியுறுத்தியும் கஸ்தூரிரங்கன் பரிந்துரைக்கு எதிர்ப்புத் தெரிவித்தும் தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கம் மற்றும் கிராமமக்கள் சார்பில் தில்லியில் போராட்டம் நடத்தப்பட்டது. மலை மக்களுக்கும் விவசாயிகளுக்கும் உரியப் பாதுகாப்பை அரசு அளிக்க மறுத்தால் தொடர் போராட்டங்களில் ஈடுபடுவோம் என்றார்.
                      யானைகளின் தொல்லையைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி அக்.17-ஆம் தேதி மூன்றாயிரம் விவசாயிகள் பங்கேற்கும் பெருந்திரள் முறையீடு நடத்தப்போவதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.
இலமு, திண்டுக்கல்

source :  தீக்கதிர் :வாழைத் தோட்டங்களை நாசப்படுத்தும் யானைக் கூட்டம் நாடகமாடும் வனத்துறை அதிகாரிகள் கொந்தளிக்கும் விவசாயிகள் 

More  Elephant  attack in ஆடலூர்  : 

WhatsApp group : https://chat.whatsapp.com/LtSWWAKMj4Y1Thu5ylobWj

Facebook         : https://www.facebook.com/adalur

FB Group        : https://www.facebook.com/groups/adalur/

FB ID              : https://www.facebook.com/adalur.dindigul

Twitter            : https://twitter.com/AdalurDindigul

Google+         : https://plus.google.com/117886525764910306543/

Instagram      : https://www.instagram.com/adalurdindigul/

Google Map : https://goo.gl/maps/LketX4ihmS52

YouTube        : https://www.youtube.com/channel/UCoVKWMVAkPI-rRwtusAut5w

Comments